திருவல்லிக்கேணியில் நேற்றிரவு (அக்டோபர் 19) காவல்துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகேயுள்ள, ஆசியன் லாஜிஸ்டிக்ஸ் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை செய்த போது கணக்கில் வராத, 12.20 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அதை ஏடிஎம் மூலமாக தன் கணக்கில் செலுத்த முயன்றதும் தெரிய வந்தது.
பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, நாங்குநேரியைச் சேர்ந்த சையது சலாவுதீன் என்பது தெரிந்தது. மேலும், ஐஸ் ஹவுஸ் பகுதி லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சலாவுதீனின் நண்பர்களான மொய்தீன் சஃபீக், மொய்தீன் ரியாஸ், அப்துல் அஜீஸ் ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 12.20 லட்ச ரூபாய், ஹவாலா பணமாக இருக்குமோ என சந்தேகித்துள்ள காவல்துறையினர், அப்பணம் எப்படி வந்தது? பணம் டெபாசிட் செய்ய இருந்த வங்கிக்கணக்கு யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ஏசியன் லாஜிஸ்டிக் கம்பெனிக்கு பணம் போடுவதற்காக எடுத்து வந்ததாகவும், 14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை, 96,500 ரூபாய், 96,500 ரூபாய் என இருமுறை செலுத்திவிட்டு, மீதமுள்ள 12,53,000 ரூபாயை வைத்திருந்த போது சையத் சலாவுதீன் பிடிபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.