சென்னை ஆர்கே மடம் சாலையில் கடந்த ஜூன் மாதம் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த பெண் ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து செயின் பறிப்பு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக இணை ஆணையர் சுதாகர் தனிப்படை ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் எண்ணூர் வரை சென்று உள்ளது. பின்னர் நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் கும்பல் இரு பிரிவாகப் பிரிந்து சென்னையின் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது விசாரணையில் அம்பலமானது.
இந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புளியந்தோப்பு அபி, நஜீர் சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் ராகுல் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாக்கத்தில் 80 லட்ச ரூபாய் அளவிற்கு பண்ணை வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்ட நசீர், அஜய், அபி ஆகிய மூவரும், வெவ்வேறு கொள்ளைச் சம்பவத்தில் கைதாகி புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதாலும் , ஊரடங்கு காலத்தில் வீட்டில் அனைவரும் இருப்பதால் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முடியாத காரணத்தினாலும், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என இந்த கும்பல் திட்டமிட்டு உள்ளது.
அந்த அடிப்படையில் விடியற் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களையும், ஆட்டோ ஓரத்தில் அமர்ந்து செல்லும் பெண்களையும் குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் மாதவரம், வில்லிவாக்கம், கீழ்பாக்கம், அபிராமபுரம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் ஒன்பது செயின் பறிப்பு சம்பவங்களை ஊரடங்கு காலத்தில் செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவர்கள் செயின் பறிப்பிற்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் திருட்டு வாகனங்கள் என்பது தெரியவந்துள்ளது. அண்ணாநகர், எம்கேபி நகர், ராயபுரம், திருவேற்காடு, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை ஒரு நாளைக்கு ஒரு சில திருட்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். அதே வாகனத்தை பயன்படுத்தினால் மாட்டிக்கொள்வோம் என்று, மற்ற வகையான குற்றங்கள் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு திருட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து எட்டு அதிவேக இருசக்கர வாகனங்கள், 64 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு சமயத்தில் செயின் பறிப்பு, வாகனத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.