கோயம்புத்தூர்:மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 22 பேரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. அருளரசு உத்தரவின் பேரில், மாவட்டத்தின் நகர்ப் புறங்களில் குற்றச்சம்பவங்களைக் குறைக்கும் வகையில், தனிப்படை காவல் துறையினர் தணிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தனர்.
இந்தவேளையில், பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் கைப்பேசி கடை நடத்திவரும், ரியாஸ் என்பவரின் கடைக்கு வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூக்கையா, ராஜ்குமார், மந்திரி ஆகிய மூவரும், மத்திய அரசால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்களான 500, 1000 தந்தால், அதற்கு ஈடாக பத்து மடங்கு புதிய பணம் தருவதாகவும், தங்களுக்கு வங்கிகளில் மேலாளர் நல்ல பழக்கமுண்டு எனவும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
பின் மூவரும் பொள்ளாச்சி அடுத்துள்ள குஞ்சிபாளையம் சுடுகாடு அருகே ரியாஸை அழைத்து, ரூபாய் 5 லட்சம் தரவேண்டும், அதன்பின் புதிய பணம் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்கு ரியாஸ் நீங்கள் முதலில் பணத்தைக் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் ரியாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்ட ரியாஸ் பொதுமக்கள் உதவியுடன், ஐந்து பேரையும் பிடித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, ரியாஸ் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையிலான தனி படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த மோசடி கும்பல் நவரத்தினக் கல், அதிர்ஷ்ட கற்கள், போலியான தங்க பிஸ்கட் என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
குற்றவாளிகள் இடமிருந்து கைப்பற்றப்பட்ட மோசடி பொருட்கள் மேலும், பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சந்தேகத்திற்கிடமான கேரளாவைச் சேர்ந்த நபர்கள் இருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று நவீன் ஆனந்த், நூறு தீன், சுனில், ரஜீஸ், அஜீஸ் பட்டேல், சுதீஸ், பைசல், அனில்குமார், சாகத், தினேஷ், இசாக், சந்திரன், வினோத், சந்தோஷ், சோஜன், அனூப், விஷ்ணு / அக்சோ, பாசில் ஆகிய 18 பேரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், இவர்கள் அனைவரும் ஏற்கனவே ரியாஸ்யை ஏமாற்ற முயற்சி செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மோசடி தொழிலுக்குப் பயன்படுத்திய 3 கார்கள் காவல் துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.