நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி சின்னாண்டி குப்பம் பகுதியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருபவர் கண்ணன் (52). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் இவரது வீட்டில் இன்று (ஆக.11) அதிகாலை, முதல் மாடி கதவை உடைத்து புகுந்து, கொள்ளைக் கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடிக்க முயன்றது.
அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணன், கொள்ளைக் கும்பல் வீட்டில் இருப்பதை உறுதி செய்தார். உடனே கண்ணனின் மனைவி காவல் கட்டுபாட்டு அறைக்கும், நீலாங்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்ததன் பேரில், அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
அப்போது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மறைந்திருந்த கொள்ளையர்களில் ஒருவரை காவலர்கள் மடக்கி பிடித்தனர். அவர்கள் அங்கு வந்ததை அறிந்த மற்றொரு கொள்ளையர், திருடிய 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வீட்டிலேயே போட்டு விட்டு தப்பியுள்ளார்.