வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில், சென்னையில் கடந்த 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்ததால், பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த ரயிலை, பாமகவினர் கருங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், தண்டவாளத்தில் பேரிகார்டுகளை போட்டு மறித்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக இதில் பொதுமக்கள் யாருக்கும் எதுவும் நிகழவில்லை.
பின்னர் இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல்துறையினர், ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தண்டவாளத்தில் தடுப்புகளை போட்டவர்கள் என இருதரப்பினர் மீதும் தனித்தனியே வழக்குகளை பதிவு செய்தனர்.