திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிபட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஜீவானந்தம் (24). இவரும் சின்ன கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் பவானி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த நாகராஜ் பவானிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி பவானியும் ஜீவானந்தமும் சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்தார்களிடம் சென்றது. இவர்களை விசாரித்த கீழ்பள்ளிபட்டு திமுக கிளைச்செயலாளர் செல்வராஜ் (70), அமமுக ஒன்றிய அவைத்தலைவர் கமலநாதன்(55) மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் ஊரை மதிக்காமல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, கட்டப்பஞ்சாயத்து செய்து, மாப்பிள்ளை வீட்டாருக்கு 40,000 ரூபாயும், பெண் வீட்டாருக்கு 10,000 ரூபாயும் என 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஊர் பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு இருவீட்டாரும் 30ஆயிரம் ரூபாய் அபாரதம் கட்டினர். மீதமுள்ள 20ஆயிரம் ரூபாய் வருகின்ற 20 ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜீவானந்தம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகாரளித்துள்ளார்.