தர்மபுரி: பாலக்கோடு அருகே டிராக்டர் ஓட்டுநர் ஓட ஓட வெட்டி படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கானூர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (45). இவர் டிராக்டர் ஓட்டுநராக இருந்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு விவசாய கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்ல அருகேயுள்ள அத்தி முட்லு கிராமத்திற்கு சென்றுள்ளார்.
டிராக்டரை நாகராஜ் (42) என்பவரின் வீட்டின் முன்பாக நிறுத்தியதற்கு, எதிர்ப்பு தெரிவித்த அவர், டிராக்டரை உடனே எடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பொதுமக்கள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
மாதையன் இன்று மாலை பால் ஊற்றுவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் பால் கேனை எடுத்துக்கொண்டு அத்திமுட்லு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது நாகராஜ் கையில் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் மாதையனை வெட்ட முயற்சித்துள்ளார்.
மாதையன் தப்பி ஓடவே, துரத்தி சென்று ஊர் மத்தியிலேயே தலை, கழுத்து பகுதியில் பலமாக வெட்டியுள்ளார். பலத்த வெட்டுக் காயங்களோடு மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர்.
டிராக்டர் ஓட்டுநரை படுகொலை செய்தது தொடர்பாக மாரண்டஅள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மாதையனுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.