நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ மாணவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்தவர்களின் படத்தை வெளியிட்டு அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவருக்கு இந்தி மொழி தெரியாது என்றும், ஆனால் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர் தனுஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் பூக்கடை காவல்நிலையத்தில் புகாரளித்தது. புகாரை அடுத்து அந்த மாணவர் கல்லூரிக்கு வருவதில்லை என்றத் தகவலும் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து மாணவரின் சொந்த ஊரான ஓசூருக்கு தனிப்படை விரைந்தது. ஆனால் மாணவரும், அவரது தந்தையும் தலைமறைவாகி விட்டனர்.