ஓஎல்எக்ஸ்-இல் குறைந்த விலையில் ராணுவ புல்லட், கார் ஆகிய வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி ராணுவ வீரர்கள் பெயரில் சிலர் விளம்பரம் செய்திருந்தனர். இந்த விளம்பரத்தை கண்ட பலர் சம்மந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் முன்பணமாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதனை உண்மை என்று நம்பியவர்கள் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளனர். பணம் செலுத்திய பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணத்தை செலுத்தியவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தனர். சில மாதங்களாக இதுபோன்ற புகார்கள் குவிந்ததையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் துணாவர் கிராமம் விரைந்தனர். அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த கிராமத்திலுள்ள அனைவருமே இதுபோன்ற மோசடியை தொழிலாக செய்துவந்தது தெரியவந்தது.
ஓ.எல்.எக்ஸ் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் ராஜஸ்தான் காவல்துறையினர் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட நரேஷ்பால்சிங் (36), பஜ்ஜூசிங் (26) ஆகிய இருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின்னர், சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
பிடிபட்ட நபர்கள் கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்பட இந்தியா முழுவதும் இதுபோன்று 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.