சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் மோகன் என்பவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் அடையாறு சைபர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மோசடி விவகாரம் தொடர்பாக புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், பிரபாகரன், ரமேஷ் ரெட்டி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன, பேடிஎம் (paytm) செயலி போன்று வெளிநாட்டில் swift global pay மற்றும் instant merchant pay செயலிகள் உள்ளன. இந்த swift global pay என்ற இணையதளத்தில் கணக்கு ஆரம்பித்து, பிட்காயின்களை கொடுத்து, அந்த வாலட் கணக்கை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறி மோகனை ஏமாற்றியுள்ளனர். மேலும், ரமேஷ் ரெட்டி, பிரபாகரன் ஆகிய இருவரும் மோகனை காரில் வைத்து கடத்தி 15 லட்சம் ரூபாய் பண மோசடி செய்தது தெரியவந்தது.
swift global pay மற்றும் instant merchant pay இரண்டும் நைஜீரிய கும்பலால் உருவாக்கப்பட்ட மோசடி இணையதளம் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 45 லட்சம் டாலர் மதிப்பிலான வாலட்டை, பிட்காயின்கள் கொண்டு வாங்கலாம் என கூறி, பிட்காயின் மோசடி செய்வதும் விசாரணையில் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.