கிருஷ்ணகிரி:குடும்ப பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார்.
ஓசூர் அரசநட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). இவர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகேயுள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த டில்லிகுமாரி (23) என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாதத்தில் சுஷ்மா என்ற பெண் குழந்தை உள்ளது.
விக்னேஷுக்கும், டில்லிகுமாரிக்கும் இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இச்சூழலில் நேற்று (ஆகஸ்ட் 21) தகராறு முற்றவே டில்லிகுமாரி தனது வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை மீட்ட ஓசூர் சிப்காட் காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, மகன் மீது கல்லை போட்டு கொன்று விட்டு கணவர் தப்பியோட்டம்!
இவ்வேளையில் ஆந்திராவிலிருந்து வந்த டில்லிகுமாரியின் பெற்றோர், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, விக்னேஷூம் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மகளை கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரிடன் புகார் தெரிவித்தனர்,
திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இச்சம்பவம் குறித்து ஓசூர் கோட்டாச்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது