திருநெல்வேலி: 10 ஆண்டுகளாக காவல் துறையினர் பிடியில் சிக்காமல் இருந்த கொள்ளையர் கொம்பையாவை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்ற கொம்பையா. இவர் வழிப்பறி செய்தல், பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இங்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
இந்த மாவட்டங்களில் முத்தையா மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால் மூன்று மாவட்ட காவல் துறையினரும் முத்தையாவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் யார் கையிலும் சிக்கவில்லை. இப்படியே 10 வருடங்கள் ஓடிப் போனது. இச்சூழலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் போரில் தனிப்படை அமைக்கப்பட்டு முத்தையா எங்கிருக்கிறார் என்று தீவிர தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டுவந்தனர்.
அதில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் தனது குடும்பத்துடன் முத்தையா வசித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், அங்குள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை சுற்றி வளைத்த காவல் துறையினர், முத்தையாவை கைதுசெய்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.