திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை- நிம்மியம்பட்டு செல்லும் சாலையிலுள்ள மராட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாண்டுராவ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான காவல்துறையினர், கிணற்றிலிருந்து சாக்கு மூட்டை ஒன்றை மீட்டு அவிழ்த்தபோது அதற்குள் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் வலது கையில் பாப்பு என பச்சைக் குத்தப்பட்ட படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைப் பார்த்து சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவர் ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் நாகராஜ் (30) என்பது தெரியவந்தது. இவர், கோவையில் டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்ததும், தனது சொந்த ஊரிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துச் சென்று கோவையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்தது.