கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பத்ராஸ் கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது ஆறு வயது சிறுமி மாயமானாள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் அச்சிறுமியின் உடல் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முதல்கட்ட விசாரணையில் மூடநம்பிக்கையின் விளைவாக சிறுமி நரபலி கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனினும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்கள் மீது சந்தேக பார்வையை திருப்பினார்கள். அப்போது அந்தப் பகுதியில் தம்பதி ஒருவரின் நடமாட்டத்தில் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அந்தத் தம்பதியரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் நெஞ்சை உறைய செய்யும் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுமி, தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு தம்பதியினர் அச்சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, பட்டாசு வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், காட்டுக்குள் தயாராக இருந்த இருவர் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அச்சிறுமியை கொன்று, அவளின் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தனித்தனியாக எடுத்துள்ளனர். அதனை அந்தத் தம்பதியரிடம் கொடுத்துள்ளனர். அந்தத் தம்பதியினர் அதனை சாப்பிட்டுள்ளனர். பின்னர் அந்த உடல் உறுப்புகள் நாய்களுக்கு வீசப்பட்டுள்ளன.
'உத்தரப் பிரதேசத்தில் மூடநம்பிக்கையால் ஆறு வயது சிறுமி கொடூரக் கொலை'- தம்பதி உள்பட நால்வர் கைது இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட தம்பதியருக்கு திருமணமாகி 21 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்நிலையில் மூடநம்பிக்கைகளை நம்பி, சம்மந்தப்பட்ட அப்பாவி சிறுமியை நரபலி கொடுத்துள்ளனர். இந்தக் கொடூரக் கொலையை அறங்கேற்றிய இருவருக்கு கூலியாக 1500 ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட நால்வரையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வணங்கும் தெய்வத்தை மகிழ்விக்க மனைவியை நரபலி கொடுத்த கணவர்!