மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும், இவருடைய மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையொட்டி கடந்த 2011ஆம் ஆண்டு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு முத்துலட்சுமி புகார் அளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் கண்ணன், காவல் நிலையம் சென்றுகொண்டிருந்த முத்துலட்சுமியை, வழியிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கண்ணனுக்கு தற்போது ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.