சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (32). இவர் கூலித்தொழிலாளி. கடந்த ஜூன் 5ஆம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பாண்டியன் என்பவரைக் கொலை செய்த வழக்கில், கூலித்தொழிலாளி பாண்டியனும் ஒரு குற்றவாளி ஆவார். இந்தக் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பாண்டியன், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
பின்னர், அவர் எதிரிகளுக்கு பயந்து வீட்டில் தங்காமல் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி வந்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல், வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து, மனைவி அறிவுநிலாவிடம் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த இரு நாள்களுக்கு முன் பாண்டியன் மோட்டார் இருசக்கரவாகனத்தில் அயப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து, குடும்பச் செலவுக்கான பணத்தை மனைவி அறிவுநிலாவிடம் கொடுத்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து மீண்டும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வேலை செய்யும் இடத்துக்கு புறப்பட்டு, அதே பகுதியிலுள்ள அம்பேத்கர் தெரு வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, ஒரு ஆட்டோ ஒன்று பாண்டியனின் மோட்டார் இருசக்கரவாகனத்தை வழிமறித்து, அதிலிருந்து இறங்கிய கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.