தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அபகரித்த நிலத்திற்கான பணம் வேண்டும் - குடும்பத்துடன் குடிநீர் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்! - குடிநீர் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்

ஏழு ஆண்டுகளாகியும் ஆக்கிரமித்த இடத்தை திருப்பிக் கொடுக்காத மாநகராட்சியைக் கண்டித்து, குளிர்சாதன பெட்டி பழுதுநீக்கும் தொழில் செய்துவருபவர் குடும்பத்துடன், குடிநீர் தொட்டிக்கு கீழ் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

man protest with family under water tank
man protest with family under water tank

By

Published : Dec 4, 2020, 6:09 PM IST

திருநெல்வேலி: ஆக்கிரமித்த இடத்தை திருப்பி தராத மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் தொட்டிக்கு கீழ் குடும்பத்துடன் குடியேறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட சேவியர் காலனியில், மாநகராட்சி சார்பில் 2013ஆம் ஆண்டு மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இச்சூழலில், இந்தக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள 45 சென்ட் நிலம் தன்னுடையது என்று கூறி மேலப்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

பின்னர் தனது இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து குடிநீர்த்தொட்டி கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தாக்கல்செய்தார். இதற்கிடையில் கணேசன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் தற்போதுவரை அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும் கணேசன் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டம் நடத்திவந்தார்.

வீட்டு உபயோகப் பொருள்கள்

குறிப்பாக குடிநீர் தொட்டி மேல் ஏறி தற்கொலை மிரட்டல்விடுத்து வருவதை வாடிக்கையாக செய்துவருகிறார். போராட்டம் நடத்தும் போதெல்லாம் காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கணேசன் இன்று திடீரென சேவியர் காலனியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கீழே குடும்பத்துடன் குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது தனது நிலத்தை ஆக்கிரமித்த அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கணேசன் தனது மனைவி மேரி, மகள்கள் கவிநயா, கனகா ஆகியோருடன் துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருள்களுடன் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ள பகுதிக்குள் கொண்டுவைத்துள்ளார்.

இதையறிந்த மேலப்பாளையம் காவல் துறையினரும், மாநகராட்சி அலுவலர்களும் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தனக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரையில், இங்கிருந்து நகர மாட்டேன் என்று கூறிய கணேசன் தொடர்ந்து அங்கேயே குடியிருந்துவருகிறார். மேலும் சமையல் எரிவாயு உதவியுடன் அங்கேயே சமைத்து உண்டு வருகின்றனர்.

இது குறித்து கணேசன் நம்மிடம் கூறும்போது, “இந்த இடம் எனது முப்பாட்டனார் வாங்கிய சொத்து. எங்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினையின் படி, எனக்கு இந்த இடம் கிரயம் செய்யப்பட்டது. எனது பெயரில் இந்த இடத்துக்கு கிரைய பத்திரம் உள்ளது.

2013ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலர்கள் அத்துமீறி எனது இடத்தை ஆக்கிரமித்து குடிநீர்த்தொட்டி அமைத்தனர். அரசு அலுவலர்கள் என்பதால் என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தற்போது வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, எனது இடத்தை ஆக்கிரமித்த மாநகராட்சி அலுவலர்கள், அதற்கு உடந்தையாக இருந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடும்பத்துடன் குடிநீர்த் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்

ஆனால், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்படி இந்தக் குடிநீர்த் தொட்டியை இடித்து தர வேண்டும். இல்லையென்றால் என்னிடமிருந்து இந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு, அதற்கான மூன்று மடங்கு தொகையைத் தர வேண்டும்.

தற்போது இந்த இடத்தின் மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும். எனவே 18 கோடி ரூபாய் தந்து இந்த இடத்தை என்னிடம் அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எனது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details