சென்னையிலிருந்து நேற்று (டிச.19) பிற்பகல் ’கோ ஏர்’ என்ற தனியார் பயணிகள் விமானம் அந்தமானுக்கு புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தமானைச் சேர்ந்த சங்கர் கர்மாக்கர் (வயது 29) என்பவரிடம் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையிட்டபோது, அவரிடம் சந்தேகிக்கும்படியான பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரது பையை பிரித்துப் பார்த்து சோதனையிட்டபோது, ஒரு கிலோ கஞ்சா போதைப்பொருள் அவரிடம் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தனி அறையில் தங்க வைத்து நீண்ட நேரம் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கொண்டு வந்த கஞ்சா மிகவும் விலை உயர்ந்த முதல் ரகத்தைச் சேர்ந்தது என்றும், ஆந்திராவிலிருந்து வாங்கி வரப்பட்டது என்றும் தெரியவந்தது. மேலும் அதனை அந்தமானுக்கு கடத்திச் சென்று பல மடங்கு அதிக விலைக்கு மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்யவிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை அம்பத்தூரிலுள்ள மத்திய போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு பாதுகாப்பு அலுவலர்கள் தகவல் கொடுத்தனர். நேற்றிரவு (டிச.19) 7.30 மணியளவில் மத்திய போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சென்னை விமான நிலையம் சென்று கஞ்சா போதைக் கடத்தலில் ஈடுப்பட்ட சங்கரைக் கைது செய்து, கூடுதல் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.