கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நித்திரவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில், வீட்டின் மாடி வழியாக நள்ளிரவில் மர்ம நபர் உள்ளே புகுந்து, வீட்டில் உறங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
அந்தப் பகுதி மக்கள் நகை பணம் திருடும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகாரளிப்பதோடு இதுகுறித்து பெரிது படுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி, காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இன்பசாகரன், தனது ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைத்த வீட்டில், தனது மனைவியுடன் ஒரு அறையில் உறங்கியுள்ளார். அவரது 16 வயதான மகள், 12வயது மகனை பக்கத்து அறையும் தூங்க வைத்துள்ளார்.
அன்றிரவு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த மகள் அலறும் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி சென்று பார்த்த போது, அறையிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனைக் கண்ட இன்பசாகரன் அந்நபரை பின்தொடர்ந்து விரட்ட, மர்ம நபர் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார்.
ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்ட இன்பசாகரன், அடையாளம் தெரியாத நபர், தன் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அறிந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆட்டோ எண்ணுடன் புகாரளித்தார்.