மதுரை:வாடிப்பட்டி அருகே காதலனை நம்பி சென்ற 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய நபரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, செம்புகுடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான பிரகாஷ். தனியார் லாரி சேவை நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுகிறார். இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பிரகாஷ் தன்னுடன் அழைத்ததாகத் தெரிகிறது. அதனை ஏற்று சிறுமியும் அவருடன் செல்ல, பிரகாஷ் தன் உறவினர் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் சிறுமியை அடைத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பிறகு சிறுமியை அங்கே வீட்டில் பூட்டி வைத்துவிட்டு தப்பிச் சென்ற பிரகாஷ், வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிலிருந்து தப்பிய சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தன் தாயிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க பிரகாஷின் வீட்டிற்கு சிறுமியின் பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது பிரகாஷின் பெற்றோர், சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிக மோசமாக சாதியைச் சொல்லி திட்டியதாகத் தெரிகிறது.
இதில் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த காவல் துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.