திருநெல்வேலி: பூ சந்தையில் திடீரென்று நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே காவல்கிணறு பகுதியில் பூ சந்தை உள்ளது. தற்போது கரோனா தொற்று ஊரடங்கால் மார்க்கெட் இயங்காத நிலையில், இன்று(செப்.28) இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சந்தையில் நாட்டு வெடிகுணடு வீசி சென்றுள்ளனர்.
வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பணகுடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். இன்னும் வெடிக்காமல் எங்காவது குண்டுகள் உள்ளதா?, வெடித்த குண்டுகள் எந்த வகையை சேர்ந்தது என ஆய்வு நடத்தினர்.