காஸ்கஞ்ச் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத சாராய கும்பலுக்கு கைதுவாரண்ட் அளிக்க சென்ற தலைமை காவலர் தேவேந்திரசிங் அடித்துக்கொல்லப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர் அசோக் குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டம் சித்புரா நக்லா தீம்ஹர் கிராமத்தில் சாராயம் வடிப்பதாக காவலர்களுக்கு புகார்கள் குவிந்தன. இந்நிலையில் இவர்களை கைதுசெய்ய வாரண்டுடன் காவல் உதவி ஆய்வாளர் அசோக் குமார் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த சமூக விரோதிகள் தாக்கியதில் தலைமை காவலர் தேவேந்திரசிங் உயிரிழந்தார். காவல் உதவி ஆய்வாளர் அசோக் குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காவலர்கள் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில் கள்ளச் சாராய கும்பலை சேர்ந்த ஒருவர் புதன்கிழமை (பிப்.10) காலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் மாயமான காவல் உதவி ஆய்வாளரின் கைத்துப்பாக்கியையும் காவலர்கள் தேடிவருகின்றனர்.
உயிரிழந்த காவலர் தேவேந்திரசிங் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆக்ராவில் புதைக்கப்பட்டது. தேவேந்திரசிங் கடந்த 10 தினங்களுக்கு முன்பு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார்.
இதைக் கூறி அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சங்களை கசக்கி பிழிவதாய் இருந்தது. தேவேந்திரசிங்குக்கு 2017ஆம் ஆண்டுதான் திருமணம் முடிந்தது. இவருக்கு மூன்று, இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி: இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட எஸ்.ஐ