திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவரை துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தற்போது கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திருச்சி காவல் துறையினர் சார்பில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சீராதோப்பு சுரேஷ், மடப்புரம் மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை கண்டவுடன் தப்பியோட முயற்சித்தனர். இதில் சுரேஷ் என்பவர் தப்பியோடிய நிலையில் மணிகண்டனை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவரை சோதனையிட்ட காவல் துறையினர் அவரிடமிருந்து நான்கு கிலோ 800 கிராம் அளவுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த நகைகளில் லலிதா ஜுவல்லரியின் இலச்சினை (எம்பளம்) பொறிக்கப்பட்டிருந்ததால் இவை அங்கு திருடிய நகைகள் என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மேல் விசாரணைக்காக மணிகண்டனை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் நேற்றிரவு திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.