கிருஷ்ணகிரி: அனுமதியின்றி கருங்கற்கள் ஏற்றிவந்த சரக்கு வாகனத்தை கோட்டாட்சியர் பின்தொடராமல் இருக்க, சாலையிலேயே கருங்கற்களை கொட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒசூரு கோட்டாட்சியராக உள்ள குணசேகரன், ஒசூரு - கெலமங்கலம் சாலை அக்கொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் புறம்போக்குப் பகுதியில் நீண்ட நாள்களாக வசித்துவரும் ஏழை எளிய 20 குடும்பங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளார்.
கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! கடத்தல்காரர்களிடம் தொடரும் விசாரணை!
அப்போது, கெலமங்கலத்திலிருந்து மினி லாரி ஒன்று வேகமாக வந்ததைக் கண்ட கோட்டாட்சியர் குணசேகரன் அதனை நிறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், மினி லாரி நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளது. மினி லாரியில் கட்டடப் பணிக்குப் பயன்படுத்தப்படும் கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்வதை அறிந்த குணசேகரன், தனது காரில் அதிவேகமாகப் பின்தொடர்ந்தார்.
கோட்டாட்சியர் வருவதை அறிந்த மினி லாரி ஓட்டுநர் மின்னல் வேகத்தில் லாரியை இயக்கியதுடன் ஒசூரு - கெலமங்கலம் சாலை அச்செட்டிப்பள்ளிக்குச் செல்லும் வளைவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து பின்தொடர்வதை அறிந்த மினி லாரி ஓட்டுநர், பயணத்திலேயே ஓடும் லாரியிலிருந்து கற்களைச் சாலையிலேயே கொட்டிவிட்டு கோட்டாட்சியர் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பித்துள்ளார்.
காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் சென்ற பெற்றோர்: மனமுடைந்த காதலன் தற்கொலை முயற்சி!
சாலையிலேயே கருங்கற்கள் கொட்டப்பட்டுவிட்டதால் வேகமாகப் பின்தொடர்ந்த கோட்டாட்சியர் வாகனம் திடீரென நிறுத்த முயன்றுள்ளது. நல்வாய்ப்பாக வாகனத்தின் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கோட்டாட்சியர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே சில நிமிடங்கள் ஆனதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அனுமதியின்றி கருங்கற்கள் ஏற்றிவந்த வண்டி பின்னர், சாலையிலேயே கிடந்த கருங்கற்களைப் பொதுமக்களும், வருவாய்த் துறையினரும் அப்புறப்படுத்தியுள்ளனர். கோட்டாட்சியர் வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிறுத்தாத மினி லாரியைப் போன்றே, கனிமவளங்களை தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொதுமக்கள் கூறியதையடுத்து, ஒசூரு கோட்டாட்சியர் இது குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளார்.