கன்னியாகுமரி: பெண்களை ஆசைக்கு இணங்க மிரட்டி, படம்பிடித்து, அதைக்காட்டி பணம் பறித்து வந்த காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.
சென்னை பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காசியை கைது செய்தனர். கைதான காசியின் கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை காவல் துறையினர் சோதனை செய்தபோது, அவர் பல பெண்களிடம் இது போல ஏமாற்றி பணம் பறித்து இருப்பது தெரியவந்தது.
மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல் துறையினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேசமணி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் காசி மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்தடுத்து பெண்கள் காசி மீது புகார் கொடுக்க தொடங்கி இருப்பதை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவரின் ஒப்புதல் கிடைத்ததும் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்.
மேலும், ஆதாரங்களை திரட்டும் பணி நடந்துவருகின்றது. அதன்படி காசியின் முக்கிய நண்பர்கள் நான்கு பேரை காவல் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் அடைத்து விசாரித்து வருகின்றார். அப்போது காசியுடன் எடுத்துக்கொண்ட படங்கள், அதனை எந்தெந்த கைப்பேசி எண்களில் இருந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்து உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரேபிட் கிட்கள் தரமற்றதா? - சீனா விளக்கம்
காசியின் நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மேலும் சிலரை பிடிக்க முடிவு செய்துள்ளனர். அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மற்ற நண்பர்களையும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்களையும் கண்டுபிடித்து விசாரிக்க உள்ளனர். விசாரணையின் இறுதியில் காசியை பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.