அம்பத்தூரில் 2014ஆம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலைசெய்யப்பட்ட வழக்கு, தமிழ்நாட்டிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள்சேர்த்த வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் தண்டனை பெற்று பிணையில் வந்த காஜா மைதீன், சையது அலி நிவாஸ், அப்துல் சமீம் ஆகிய மூன்று பேரும் கடந்த நவம்பர் மாதம் தலைமறைவானார்கள்.
அவர்களை தமிழ்நாடு உளவுத் துறையினர், கியூ பிரிவு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் முகமது அனிப் கான், இம்ரான்கான், அப்துல் செய்யது ஆகிய மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் காஜா மைதீன், கூட்டாளிகள் தப்பிச் செல்வதற்கு உதவிபுரிந்ததாகக் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் காஜா மைதீன், சையத் அலி நிவாஸ், அப்துல் சையது ஆகிய 3 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக டெல்லி காவல் துறையினருக்கு, தமிழ்நாடு கியூ பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரும் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் கைதுசெய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் கடந்த 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இருவர் சுட்டுக் கொலை செய்த பின் தலைமறைவாகினர். அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது பெங்களூரு காவலர்கள் அவர்களைக் கைதுசெய்தனர்.
கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இந்நிலையில் இவர்களைக் கடந்த 16ஆம் தேதி கன்னியாகுமரி காவல் துறையினர் கைதுசெய்து தமிழ்நாடு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் மீது பயங்கரவாத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களும், கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திவந்தனர்.
அதனடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கையும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: எஸ்.ஐ. வில்சன் வழக்கு: குற்றவாளிகளை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி