ஒடிசாவைச் சேர்ந்த ராஜூ என்பவர், அதே மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு, மலேசியாவில் கட்டட வேலை வாங்கித் தருவதாகக்கூறி, அனைவரையும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை விசா தயாரானதும் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசா தயாராகி விட்டதாகக்கூறி ஐம்பது பேரையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு வரவழைத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே உள்ள தமிழ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ராஜூவும் அவரது கும்பலும் தங்க வைத்துள்ளது. பின்னர் நேற்றிரவு சுப்ராத் குமார் போலோ என்பவருடன் ஐந்து பேர் அந்த ஓட்டலுக்கு வந்து, 50 பேருக்கும் மலேசியா செல்வதற்கான விசாவை அளித்துள்ளனர்.
அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்ட பின், காலை 9 மணிக்கு அனைவரும் விமான நிலையத்தில் தயாராக இருக்கக் கூறிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. அந்த ஐம்பது பேரில் ராஜேஷ் குமார் மதன் என்பவர் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால், விசாவில் உள்ள பார்கோடை அருகில் உள்ள இன்டர்நெட் மையத்தில் சோதித்துப் பார்த்துள்ளார்.
அதில் எந்த விவரங்களும் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக சுப்ராத் குமார் போலோவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது நேரடியாக ஓட்டலுக்கு வருவதாகக் கூறிய சுப்ராத் குமார் போலோவை மீண்டும் தொடர்பு கொண்ட போது, அவர் உட்பட அக்கும்பலில் உள்ள அனைவரது செல்போன்களும் அனைத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
இதையடுத்து சுதாரித்த அந்த 50 பேரும், தி.நகர், கோயம்பேடு பேருந்து நிலையங்கள், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், விமான நிலையம் என ஐந்து குழுக்களாக பிரிந்து தேடியுள்ளனர். அதில் ஒரு குழு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, சுப்ராத் குமார் போலோ உட்பட ஐந்து பேர் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவர்களை துரத்தியபோது அதில் மூவர் தப்பி ஓடிய நிலையில், ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பத்ரா என்ற இருவரை மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் பிடித்தனர்.
அவர்களை அருகில் இருந்த கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, நடந்தவற்றை கூறியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய கோயம்பேடு காவல்துறையினர், நிகழ்வு நடந்த அனைத்தும் பூக்கடை காவல் மாவட்டத்திற்கு உட்பட பகுதி என்பதால், பூக்கடை காவல் நிலையத்திற்கு இவ்வழக்கை மாற்ற உள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் எக்விடாஸ் வங்கியில் பணம் கொள்ளை