நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அனிதா, விமல்ராஜை சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்கவந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததையடுத்து, கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த விமல்ராஜ், அனிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருக்குப் போராடிய கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், "அனிதாவின் மூத்த சகோதரர் அருணுக்கும் சேலத்தை சேர்ந்த நிக்கல்சன் என்பவரின் மனைவி சோபனா என்பவருக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவை இருந்துள்ளது. இந்த விவகாரம் சோபனாவின் கணவர் நிக்கல்சனுக்கு தெரியவர, அவர் இதனைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அருணுக்கும் சோபனாவிற்கும் இடையேயான மண உறவைத் தாண்டிய காதல் நீடித்துள்ளது.