மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கே. வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மகன் சண்முக கண்ணன் (27). இவர் மதுரையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே ஜவுளிக்கடையில் சிவகங்கையைச் சேர்ந்த நிவேதா (23) என்பவரும் பணியாற்றினார்.
இருவரும் ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூன் 6ஆம் தேதி திருமங்கலம் அருகே சித்தாலை கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்.
அப்போது, பெண் வீட்டார் தங்களுக்கு மகள் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், திருமணம் முடிந்து 20 நாள்கள் கழித்து பெண் வீட்டார் காதல் ஜோடியை சந்தித்து விருந்திற்காக அழைத்துச் செல்ல வந்தனர். இருவரும் செல்ல மறுத்த நிலையில், தனது மகளை மட்டும் பெண் வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர். நிவேதா சென்று பத்து நாள்களாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சண்முக கண்ணன் பெண் வீட்டாரை சந்தித்து தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.