கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பனிப்பிச்சை(36) என்பவருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி இரவு மாரடைப்பால் மேகலா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாருக்கு பனிப்பிச்சை தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நவம்பர் 18ஆம் தேதி காலையிலேயே அவசரமாக நல்லடக்கம் செய்தார்.
ஆனால், மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமைக்கு பனிபிச்சை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, மேகலா இறந்த 30ஆவது நாளான டிசம்பர் 21ஆம் தேதி முட்டம் தேவாலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது. அங்கு வந்த பனிப்பிச்சை, தனது மகனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை மேகலாவின் சகோதரி மகளிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்த 16 வயதுடைய சிறுமி, அதை தாயாரிடம் கொடுத்தார். அவரும் அந்த கடிதத்தை படித்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தில், "உன்னை (சிறுமியை) காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்வே உனது சித்தி மேகலாவை அடித்துக் கொலை செய்தேன். தற்போது துணை இல்லாமல் தவிக்கிறேன். எனது குழந்தைகளுடன் சேர்ந்து நாம் வாழலாம். என்னை நீ காதலிக்க வேண்டும்" என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.