கவுண்டம்பாளையத்தில், இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டதை அடுத்து, இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கார் ஓட்டி வந்த நபரும் இரு சக்கர வாகனம் வந்த பெண்ணும் தங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்காக அவரவர் தரப்பிலிருந்து தங்களது நண்பர்களை அழைத்துள்ளனர்.
விபத்து நடத்த இடத்திற்கு வந்த இருதரப்பு ஆட்களும் பேச, அது கடும் வாக்குவாதமாக முற்றி இறுதியில் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது பெண் சார்பில் வந்த பாஜகவை சேர்ந்த அசோக் தரப்பினர், இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக் தரப்பினரை அரிவாளால் தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதை அறிந்த பாஜக நிர்வாகி அசோக், அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், படுகாயம் அடைந்த 3 பேரையும் காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.