தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 2:05 AM IST

ETV Bharat / jagte-raho

சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டாஸ்!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

thanigachalam
thanigachalam

சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர், கரோனா நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இதனை கண்ட சுகாதாரத் துறை இயக்குநர், உண்மைக்கு மாறான விதமாக வீடியோ பரப்பி வரும் திருத்தணிகாசலதைக் கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 4ஆம் தேதி புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் கடந்த 6ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தணிகாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர் மத்திய அரசிடம் சான்றிதழ் பெறாமல் கரோனா மருந்தைக் கண்டுபிடித்து உள்ளதாகவும், இதனை அனுமதியின்றி சமூக வலைதளத்தில் பரப்பியதற்காகவும் தற்போது தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும், அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜெனிவா நாட்டிற்குச் சென்று ஒரு கருத்தரங்கில் பேசிய திருத்தணிகாசலம், கரோனாவுக்கு தம்மிடம் மருந்து இருப்பதாகக் கூறியதை நம்பி ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் அவரிடம் மருந்து கேட்டிருப்பதும், அதற்கு இவர் தயாரித்த ஆயுலக்ஸ் என்ற மாத்திரையையும், வாதசுரக் குடிநீர் போன்ற மருந்தையும் கொரியர் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் அனுப்பிய கொரியரைக் கொண்டு சென்ற நிறுவனத்திடம் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏற்கெனவே பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தவறான சிகிச்சையளித்து இருப்பதாக இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு தவறாக மருந்துகளை இவர் அளித்துள்ளாரா, இதனால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை விசாரிக்க இவரது சித்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற பொதுமக்களின் விவரம் அடங்கிய டைரியை மருத்துவமனையிலிருந்து சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள பிரஸ் கிளப்பில் தணிகாசலம் மற்றும் அவரது மனைவி சித்த மருத்துவர் வேணி ஆகியோர் கரோனா மருந்து கண்டுபிடித்து உள்ளதாகக் கூறி பேட்டி அளித்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு தெரியவராததால் பணம் சம்பாதிக்க முடியாது என்று எண்ணிய தணிகாசலம், கரோனா மருந்து குறித்து வீடியோ வெளியிட்டு சிக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கண்டுபிடித்து உள்ளதாகக் கூறிய கரோனா மருந்தை பறிமுதல் செய்து சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்த சோதனையின் முடிவை பொறுத்து தணிகாசலம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பலரும் சிகிச்சைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக இவரது மனைவி வேணியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். இதனால் இந்த மோசடிக்கும் இவரது மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details