திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரது மகன் அரவிந்த் (22). பாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் ஊரின் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தபோது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. தன் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தவந்த சபீனாவும், அரவிந்தும் தொடர்ந்து சந்தித்துவந்துள்ளனர்.
தொடர்ந்து சபீனாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அவருடனான உறவை அரவிந்த் தொடர்ந்த நிலையில், தான் கர்ப்பம் அடைந்திருப்பதையறிந்த சபீனா, கடந்த 21ஆம் தேதி தன் வீட்டைவிட்டு வெளியேறி அரவிந்தனுடன் சென்றுள்ளார். மகள் திடீரென காணாமல்போனதால் அதிர்ச்சியடைந்த சபீனாவின் தந்தை, தன் மகளைக் காணவில்லை எனக் கடந்த 22ஆம் தேதி ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து சபீனாவை அவரது வீட்டருகே விட்டுவிட்டு, அரவிந்த் தலைமறைவாகியுள்ளார். வீடு திரும்பிய சபீனாவை அவரது பெற்றோர் விசாரித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.