வேலூர் மாவட்டம் காரைப் பகுதியைச் சேர்ந்தவர் காவியா(25). இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(32) என்பவருடன் திருமணமானது. இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணமான மூன்றே மாதத்தில் தம்பதியினர் பிரிந்துவிட்டனர். இதையடுத்து காவியா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு நான்கு வயதில் தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இச்சூழலில் தனது தாய் வீட்டில் இருக்கும்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தியாகராஜன்(25) என்பவர் உடன் காவியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
4 வயது குழந்தையை தாயே கொன்று புதைத்த கொடூரம்..! - குழந்தையை கொன்ற தாய்
வேலூர்: வாலாஜாபாத் அருகே தான் பெற்ற நான்கு வயது குழந்தையை, தன் இரண்டாவது கணவருடன் சேர்ந்து தாயே கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காவியா, தியாகராஜனை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் அடிக்கடி தனியாக வெளியே சென்று வர இடையூறாக இருப்பதாகக் கருதி தருணை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 13ஆம் தேதி வீட்டின் கழிவறையில் உள்ள வாளியில் தண்ணீர் நிரப்பி, அதில் குழந்தை தருணை அமுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுவனின் உடலை புதைத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே இச்சம்பவத்தை தியாகராஜன் தனது நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இதையறிந்த காவியா, தானும் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்பதை உணர்ந்து வாலாஜாபேட்டை கிராம நிர்வாக அலுவலர் அதியமானிடம் சென்று தனது குழந்தையைக் கொன்று புதைத்த விவரத்தை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அதியமான், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், காவியாவைக் கைது செய்த காவல்துறையினர், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் அலுவலர்கள் முன்னிலையில் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். தப்பி ஓடிய தியாகராஜனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற குழந்தையை இரண்டாவது கணவரின் தூண்டுதலின் பேரில் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.