திருப்பத்தூர் மாவட்டம் நாட்டரம்பள்ளியை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தில் வசித்துவரும் கூலித் தொழிலாளி கண்ணதாசன். பெயிண்டர் வேலை செய்து வருகிற இவருக்கு திருமணமாகி சங்கீத (21) என்ற மனைவி, 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது, இரண்டாவது முறையாக கருதரித்த சங்கீதா 7 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் கண்ணதாசன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் வந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்த ஆசாமி கண்ணதாசனின் அப்பாவிடம், அவரது மருமகளுடைய தூரத்து உறவினர் என்று அறிமுகமாகியுள்ளார்.
தனது பிள்ளைகளுக்கு காதணி விழாவுக்கு அழைக்க வந்திருப்பதாக கூறியவர், அழைப்பிதழ் தீர்ந்துவிட்டதாகவும், இருப்பினும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பின்னர், நன்கு தெரிந்தவர் போல பேசிவிட்டு வீட்டை நன்கு நோட்டமிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மீண்டும் நள்ளிரவு கண்ணதாசன் வீட்டிற்கு வந்த அதே நபர், வீட்டிலிருந்த சங்கீதாவிடம் தன்னை அவருடைய கணவரின் தூரத்து உறவினர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். சங்கீதாவிடம் பேச்சுக் கொடுத்த அவர், ஆண் குழந்தை இல்லை என்று சொல்லி கண்ணதாசன் தன்னிடம் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு ஒரு பரிகார பூஜை செய்யவேண்டும் என்று கண்ணதாசனிடம் கூறியதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் பரிகாரம் செய்தால் கண்டிப்பாக பிறக்கும் என்று கூறி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனையடுத்து, அவர்களது உறவினர்களை வெளியில் இருக்கும்படி அறிவுறுத்திய அந்த ஆசாமி, சங்கீதாவை பூஜை அறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்து பரிகாரம் செய்வதாக பாசாங்கு காட்டியுள்ளார்.
அப்போது சங்கீதாவிடம் பரிகாரப் பூஜையின்போது தங்கம் அணியக்கூடாது அதை கழற்றி சாமி படத்தருகே சொன்னதைக் கேட்ட சங்கீதா தாலி மற்றும் தங்க செயின் உள்பட 5 சவரன் மதிப்புள்ள நகையை கழற்றி பூஜையில் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சங்கீதாவின் நெற்றியில் விபூதி வைப்பது போல் மயக்கப் பவுடரை தூவி மயக்கமடைய வைத்துள்ளார்.
அந்த ஆசாமி பின்னர் சங்கீதாவின் தாலி மற்றும் செயின் ஆகியவற்றை திருடிச்சென்று தப்பித்து உள்ளார். இதனிடையே, மயக்கம் தெளிந்து எழுந்த சங்கீதா பார்த்தபோது பூஜையறையில் வைத்திருந்த 5 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் கண்ணதாசன் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் நாட்டரம்பள்ளி காவல்துறையினர் அந்த போலி சாமியாரை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். வீட்டிற்குள் நுழைந்து துணிகரமாக கொள்கையில் ஈடுபட்ட அந்த போலி சாமியாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.