சென்னை:போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் முன்னிலையாகாத தந்தை, மாணவி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை திட்டமிட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வின்போது. தீக்ஷிதா என்ற மாணவி போலியான நீட் மதிப்பெண் சான்றிதழைப் பயன்படுத்தி கலந்தாய்விற்கு கலந்துகொண்டதாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தையும், பல் மருத்துவருமான பாலச்சந்திரன், மாணவி தீக்ஷிதா மீது ஆறு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 15ஆம் தேதி முதல்முறையாக அழைப்பாணை அனுப்பி அவர்கள் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து இரண்டாவது முறையாக முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்படியிருந்தும் தந்தையும், மாணவியும் விசாரணைக்கு முன்னிலையாகாததால் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மருத்துவர் பாலச்சந்திரன் சொந்த ஊரான பரமக்குடியில் விசாரித்தபோது தலைமறைவாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே நீட் ஆள்மாறட்ட மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்த நிலையில், இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.