சென்னை: மின்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனம் வங்கி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
மின்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனம் அக்னைட். இதன் தலைமை அலுவலகம் வேளச்சேரி - தாம்பரம் சாலையில் உள்ளது. மேலும் அண்ணா சாலையிலுள்ள கிளப் ஹவுஸ் பகுதியிலும் ஒரு அலுவலகம் உள்ளது. இதன் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன், இயக்குநர் பத்மநாபன், அரசு அலுவலர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் சுமார் 310 கோடி ரூபாய் கடன் பெற்று, வேறு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்து பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளது. இதனையடுத்து எஸ்பிஐ நிர்வாகம் தரப்பில் சிபிஐயிடம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரிலுள்ள சிபிஐ வங்கி மோசடி பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து சிபிஐ அலுவலர்கள் சென்னையில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட ட்ரான்ஸ்ட்ராய் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பான இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனத்தை தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி ராஜபட்டி சாம்பசிவராவ் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.
சுமார் ஏழாயிரத்து 926 கோடி ரூபாயை கனரா வங்கி கன்சார்டியம் மூலம் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்ததையடுத்து நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ சோதனை நடத்தியது.
இந்தியாவில் டைமண்ட் வியாபாரி நிரவ் மோடி அடுத்து மிகப்பெரிய கடன் மோசடி செய்த நிறுவனம் இதுவே ஆகும். ஏற்கனவே இதே நிறுவனத்தின் மீது 3,822 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.