திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (55). வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மினி வேன் ஓட்டி வருகிறார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை திருவண்ணாமலை பால் குளிரூட்டும் மையத்தில் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், அவருக்கு ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் நிலுவைத் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. இப்பணத்திற்கான காசோலை தயாராக இருந்த நிலையில், இது குறித்து முருகேசன் வேலூர் ஆவின் பால் உற்பத்தி மேலாளர் ரவி (55) என்பவரிடம் கேட்டுள்ளார்.
காசோலையை கொடுக்க வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என, ஆவின் மேலாளர் ரவி கேட்டதாகவும், இதில் அதிர்ச்சியடைந்த முருகேசன் இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார்.
அவர்களது அறிவுரையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் முருகேசன் நேற்று (டிச.23) காலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த மேலாளர் ரவியிடம் பணத்தைக் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான குழுவினர் லஞ்சம் வாங்கிய மேலாளர் ரவியை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலூர் ஆவினில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த கணேசன், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி வேலூரில் இருந்து திருநெல்வேலி ஆவினுக்குப் பொது மேலாளராகப் பணி இட மாறுதலின் அடிப்படையில் சென்றார்.
இவர் தான், தன்னை லஞ்சம் பெறத் தூண்டியதாக ரவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையிலான குழுவினர், திருநெல்வேலியில் இருந்த கணேசனையும் கைது செய்தனர். பின்னர் வேலூர் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு: 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்