சென்னை அருகே உள்ள நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (22). இவரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் அடித்தும், பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 'ரஞ்சித் அவருடைய நண்பர்கள் மாடா விக்கி, பேட்டை சுரேஷ், பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், ஹரிஹரசுதன், இஸ்ரேல் ஆகிய ஆறு பேருடன் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளார்.
அப்போது குடிபோதையிலிருந்த ரஞ்சித்தை அவரது நண்பர்கள் கல்லால் அடித்தும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது' தெரியவந்தது. ரஞ்சித்தை கொலை செய்த அவரது நண்பர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது 2018ஆம் ஆண்டு அன்பழகன் என்ற காவலரை ஓடஓட அரிவாளால் வெட்டியது, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பூந்தமல்லி காவல் நிலையத்தில்நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.