சென்னை: 5வாகனங்களைத் தீ வைத்து எரித்தக் கும்பலை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அம்பத்தூரையடுத்த கள்ளிகுப்பம் புதிய அருள் நகர், 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் மோகன் (27). இவரது வீட்டருகே சிவா (24), மணிகண்டன் (30) என்பவர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் மூவரும் கூலி வேலை செய்துவருகின்றனர். இச்ச்சுழலில், அக்டோபர் 12ஆம் தேதி இரவு இம்மூவரும் தங்களது இருச்சக்கர வாகனங்களை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.
பின்னர், அதிகாலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது இவர்களது வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்திருந்தன. இதேபோன்று, அதேபகுதியில் விஜய் அவன்யூவில் வசித்துவரும் தனியார் நிறுவன ஊழியரான சூர்யாவின் (25), இரண்டு இருச்சக்கர வாகனங்களும் தீக்கு இரையாக்கப்பட்டது.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராஜகுமார் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரவுடி ஓலை மணி தலைமையில் வந்த ஆறு பேர் கொண்ட போதைக் கும்பல், இருச்சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் உள்பட இருவரைத் தாக்கியும், அதேபகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து சென்றதும் தெரியவந்தது.
ஐந்து வாகனங்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்த சிசிடிவி பதிவு இதனையடுத்து, ஓலை மணி (28), யுவராஜ் (24), பரத் (22), சீனிவாசன் (21), அஜித்குமார் (20), வீரா (20) ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.