சென்னை: ‘டிரைவ் அகைன்ஸ்ட் ட்ரக்ஸ்’ அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 824 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 148 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதை பொருள்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்றுவதற்காக ‘டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ்’ (போதை பொருட்களுக்கு எதிரான பயணம்) என்ற திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி, அதற்காக தனிப்படை உருவாக்கப்பட்டு இரண்டு மாதமாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 824 கிலோ கஞ்சாவை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படை காவலர்கள் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தியும், விற்பனையும் செய்துவந்த பலரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரிக்கும் போது பெரும்பாலான நபர்கள் கஞ்சாவை ஆந்திர பகுதியில் இருந்து வாங்கிச் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனடிப்படையில் ஆந்திர பிரதேசத்திற்கு விரைந்த தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினர் அங்கு முகாமிட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
செங்குன்றம் பகுதியில் வெங்காயத்திற்கு அடியில் வைத்து கனரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 451 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 15 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை காவல் துறையினர், முக்கிய குற்றவாளிக்கு உதவியதாக கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும், அவரளித்த தகவலின்படி ஆந்திர பிரதேசம் நசிரிபட்டிணம் பகுதிக்குச் சென்று, அங்கும் மூன்று நாட்கள் முகாமிட்டு அந்த மாநில காவல் துறையினரின் உதவியோடு வீடுவீடாக கோம்பிங் ஆபரேஷன் சோதனையில் ஈடுபட்டு தமிழ்நாட்டிற்கு கஞ்சா விநியோகம் செய்துவந்த நக்கபானு பிரகாஷ்(23), கண்டி கிருஷ்ணா ஆகியோரை கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிராஜூதின், இவரது கூட்டாளியான சரவணன் என்பவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிராஜூனிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நவின் என்பவருக்கு 7.5 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி கஞ்சா கேட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் தலைமறைவாக உள்ள நவீன் என்பவரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மட்டும் மொத்தம் 7 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சூழலில் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டுகளை தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் மட்டும் டிரைவ் அக்கைன்ஸ்ட் டிரக்ஸ் என்ற திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட ரெய்டில் 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 824 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.