தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரயில் பாதையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் உலகனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து ஆறுமுகத்தின் உடலை மீட்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து உடற்கூறாய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வு மேற்கொண்டதில் ஆறுமுகத்தின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் சிக்கமாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாள பகுதியில் தடயங்களைச் சேகரித்தனர். அங்குத் தடயங்கள் ஏதும் கிடைக்காததால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சண்முகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடிகளுக்கிடையே ரத்தம் கொட்டிக்கிடந்ததை தடயவியல் சோதனையின் மூலம் கண்டறிந்தனர்.
மேலும் ஆறுமுகத்தை சண்முகம்தான் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரயில் தண்டவாளத்தில் வீசியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சண்முகத்தின் விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி சுற்றித் திரிவதால் நாட்டுத் துப்பாக்கியுடன் காவலில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்படி காவலிலிருந்தபோது, விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை நோக்கி சண்முகம் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.