திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே கர்லப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் திராவிடர் கழகத்தில் மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அவரது மகன் சந்திரபோஸ்(32) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பள்ளிப்பட்டைச் சேர்ந்த பத்ரைய்யா என்பவரின் மகள் திவ்யா(23) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருப்பினும் இதுவரை குழந்தைகள் இல்லாத நிலையில் திவ்யாவை கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி திவ்யா வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திவ்யாவின் தந்தை பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், எனது மகளை அவரது கணவர், மாமியார், மாமனார், மைத்துனர் ஆகியோர் குழந்தைகள் இல்லை என்று துன்புறுத்தி தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பட்டு காவல்துறையினர், இறந்த திவ்யாவின் கணவர் சந்திரபோஸ் அவரது தந்தை பெருமாள், மைத்துனர் வீர பிரதாப் சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு நேற்றிரவு(டிச.20) திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை காவல்துறையினர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.