சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஆண்டனி. இவர் பன்னாட்டு ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில் அமெரிக்க நாட்டில் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு கடையில் இவரது வங்கி அட்டையை பயன்படுத்தி இந்திய மதிப்பில் 46 ஆயிரம் ரூபாய்க்கு இணையவழியாக (ஆன்லைன்) பொருள்கள் வாங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை வேளச்சேரியில் இருந்த பிரான்சிஸுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உடனடியாக வங்கி கணக்கு வைத்துள்ள அடையாறு ஆர்.பி.எல். வங்கி கிளையை தொடர்புகொண்ட அவர், தனது ஒப்புதல் இல்லாமல் பண மோசடி நடைபெற்று இருப்பதைக் கூறி தனது பண அட்டையை பிளாக் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது பகுதிக்கு அருகில் உள்ள வேளச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார்.
இணைய வழி மோசடி என்பதால் அடையார் காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு இந்த புகார் மாற்றப்பட்டது.
அங்கு உடனடியாக பிரான்சிஸ் சென்னையில் தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் அருகாமையில் உள்ள அவர் வங்கிக் கணக்கு வைத்துள்ள ஏடிஎம்மில் குறைந்தபட்ச ஒரு தொகை எடுத்து அந்த ரசீதை புகார் உடன் இணைத்து காவல்துறையினர் பெற்றுள்ளனர்.
பெற்ற புகார் மற்றும் வங்கி ஏடிஎம் ரசீதை உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் குறிப்பிட்ட வங்கி கிளை மேலாளருக்கு வாடிக்கையாளர் ஒப்புதல் இல்லாமல் மோசடி செய்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை தெரிவித்துள்ளனர்.
பின்னர், வங்கி நிர்வாகம் உடனடியாக அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட அந்த கடைக்கு பணம் செல்வதற்கான பணபரிமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.
அந்த பணம் 19 நாள்களுக்கு பிறகு சுந்தரம் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டது. அவர் இழந்த 46 ஆயிரம் ரூபாய் அவருக்கு உடனடியாக கிடைக்க அவர் செயல்பட்டதாலும், காவல்துறையின் துரித நடவடிக்கையாலும் பணம் திரும்ப கிடைத்தது.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில்," இணையவழி பண பரிமாற்றத்தில் முக்கோண வடிவில் இந்த பண பரிமாற்றம் நடைபெறும். இணையத்தில் இருந்து ஒரு பொருளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்
ஆர்டர் செய்யும்போது அது நேரடியாக அந்த நிறுவனத்திற்கு செல்லாமல் வாடிக்கையாளருக்கும் விற்பனை செய்த நிறுவனத்துக்கும் இடையே உள்ள இடை நிறுவனம் ஒன்றுக்கு செல்லும். அதன்பின், நாம் செலுத்தும் பணம் அந்த இடைநிலை நிறுவனம் வழியாகத்தான் குறிப்பிட்ட விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு செல்லும். எனவே, நமது ஒப்புதல் இல்லாமல் இணைய வழியில் ஒரு பொருளை வாங்கியதற்கான தகவல் நமக்கு கிடைத்த உடனே காவல்துறையிடம் புகார் அளித்தால் நமது பணம் நேரடியாக பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை சென்று அடைவதற்கு முன் இடை நிறுவனத்திடம் பேசி அதை நிறுத்தி திரும்ப வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் வசதி உள்ளது.
இது இந்தியன் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் முறையிலேயே உள்ளது.
அதன்படி நமது ஒப்புதல் இல்லாமல் நமது வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து நடைபெறும் மோசடியில் இதுபோன்று துரிதமாக செயல் பட்டால் உடனடியாக பணமோசடி நடைபெறுவதை தடுக்கலாம்.
எனினும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஓ.டி.பி. பெற்று நடைபெறும் மோசடியில் இவ்வாறு பணத்தை உடனடியாக பெற முடியாது. அதற்கான காரணம் இதில் வாடிக்கையாளர் நேரடியாக மோசடிப் பேர்வழியிடம் ஓ.டி.பி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் தெரிவிக்கிறார். எனவே இந்த மோசடியில் வாடிக்கையாளரும் அவருக்கே தெரியாமல் ஈடுபடுவதால் மோசடியாக நடைபெற்ற பணப்பறிமாற்றம் என நிரூபிக்கமுடியாது. அதனால் அவ்வாறு இழந்த பணத்தை திரும்பப் பெற இயலாது.
இதுபோல வங்கி அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் நேரடியாக வங்கி கணக்கிற்கு பணம் ஆக மாற்றுவது கிடையாது. மேலும் பணமாக எடுப்பதும் கிடையாது. ஓ.டி.பி. பெறாமல் வங்கி விவரங்களை மட்டும் வைத்து இணையவழி ஷாப்பிங்கில் ஈடுபட்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதால் இவர்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம்.
எனவே வங்கி வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்து ஒருவேளை தங்களுக்கு தெரியாமல் மோசடி நடைபெற்றால் உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவித்தது மட்டும் மூலமே இதுபோன்ற மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்"என தெரிவித்தனர்.