நீலாங்கரையை அடுத்த உத்தண்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மகேஷ். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கிடம் 4 கோடி ரூபாயை மகேஷ் கடனாக பெற்றுள்ளார். ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25 லட்ச ரூபாய்க்கான நிரப்பப்பட்ட காசோலையை, ஹர்பஜன் சிங்கிடம் மகேஷ் அளித்துள்ளார். ஆனால், அதனை வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்ப வந்துள்ளது.
இதனையடுத்து, சூப்பர் கிங்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் சென்னை வந்த ஹர்பஜன் சிங், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்புகார் மீது நீலாங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி தொழிலதிபர் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தானும், பிரபா சேகர் என்பவரும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம், 4 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதற்கு அடமானமாக, தாழம்பூரில் உள்ள சொத்தை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வரை, 4.05 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து விட்ட நிலையில், வைரஸ் பரவலால் வட்டி குறித்த பேச்சில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுக்க வேண்டாம் என வங்கியிடம் அறிவுறுத்தி இருந்ததால், காசோலை திரும்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.