தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கேரளா தங்க கடத்தல் வழக்கு: முன்னாள் முதன்மைச் செயலாளருக்கு 7 நாள் காவல்! - முதன்மை செயலாளர் சிவசங்கர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அலுவலருமான எம். சிவசங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

sivasankar
sivasankar

By

Published : Oct 30, 2020, 1:38 AM IST

திருவனந்தபுரம் (கேரளா): தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை காவலில் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளா தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரிடம் சுங்கத் துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், அமலாக்கப் பிரிவினர் பல முறை விசாரணை நடத்தினர். சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சிவசங்கரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, அதில் அவர் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்குத் தொடர்பாக சுங்கத் துறை, அமலாக்கப் பிரிவு தனித் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சூழலில் சிவசங்கர் சார்பில் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், 28 ஆம் தேதி வரை சிவசங்கரைக் கைது செய்ய அமலாக்கப் பிரிவுக்குத் தடை விதித்தது.

இந்நேரத்தில், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் சிவசங்கர் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசங்கரை கைது செய்யத் தடை விதிக்கும் உத்தரவை நீட்டிக்க அமலாக்கப் பிரிவு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவசங்கர் பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்நது நேற்றிரவு (அக். 28) சிவசங்கரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவருக்கு இரவே மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை அமலாக்கப் பிரிவினர் அரசு மருத்துவமனையில் முடித்தனர்.

இதனையடுத்து, இன்று (அக். 29) காலை எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் சிவசங்கரைமுன்னிறுத்தினர். தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் சிவசங்கரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 14 நாட்கள் காவல் வழங்க மறுத்து, 7 நாட்கள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, நவம்பர் 7ஆம் தேதி மீண்டும் சிவசங்கரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி, அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தைச் சுங்கத்துறையினர் ஜூன் 5ஆம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சரித் குமார் அளித்த தகவலின்படி, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்த போது தான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார். ஸ்வப்னா சுரேஷுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details