சென்னை:மீன் வியாபாரம் செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் வங்கியில் மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள சௌத் இந்தியன் வங்கியின் மேலாளர் ஜலாலுதீன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் விசாரனையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கிளாட்சன், ஜெயசீலி தம்பதி அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு அடையாறு இந்திய ஓவர்சீஸ் வங்கியில் இரண்டு கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பின் அதிகப்படியான கடன் தேவைக்காக 2018ஆம் ஆண்டு அண்ணாசாலையில் உள்ள செளத் இந்தியன் வங்கி மூலம் 3.25 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கரோனா காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு மாதமாக தவணையை செலுத்தாமல் இருந்துள்ளனர். அதன்பின் கரோனா காலத்தில் மாதத் தவணை யாரும் செலுத்த வேண்டாம் என்ற அரசின் உத்தரவையும் சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் மாதத் தவணைகள் செலுத்த அரசு உத்தரவிட்டதையடுத்து, வங்கி சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது இந்த தம்பதி போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.