வேலூர் மாவட்டம் கீழ் முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், வடுகந்தாங்கலில் உள்ள பள்ளிக்கு சென்று வரும்போது மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஒரு தரப்பை சேர்ந்த மாணவனின் சகோதரர் விசாரித்ததால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கீழ் முட்டுகூர் கிராமத்தை சேர்ந்த தரணி(27), லலித்குமார்(27) தரப்புக்கும் கோபி(24), விஷ்ணு(23), சக்திவேல்(20), அருண்(25) தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு கீழ் முட்டுக்கூர் பகுதியில் விஷ்ணு, அருண் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை, தரணி, லலித்குமார் தரப்பினர் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை பனமடங்கி காவல் துறையினர் கைது செய்தனர்.