திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜா (32). இவரது மனைவி ஷீபா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு மகன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக ஷீபா பெண் குழந்தையுடன், தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார். மகன் சஞ்சயை சுரேஷின் அத்தை வளர்த்துவருகிறார்.
சுரேஷ் ராஜா திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். கடந்த ஜூன் மாதம் பல்லடத்தில் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ், செப்டம்பர் 23ஆம் தேதி பிணை பெற்று வெளியே வந்தார். ஆனால், அன்று மாலை கோவை பீளமேடு காவல் துறையினர் மூலம் வேறொரு திருட்டு வழக்கில் மீண்டும் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (அக். 14) கோவை மத்திய சிறையில் சுரேஷ் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட சிறைக் காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.