மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகாயி என்பவரின் மகனுக்கு நேற்று(அக்.18) திருமணம் நடைபெற்ற நிலையில், மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி அவரது வீட்டில் நடந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 இளைஞர்கள், வீட்டு வாசலில் நின்றிருந்த திருமண வீட்டார் மீது மோதினர்.
வேகமாக வாகனம் ஓட்டியதைத் தட்டிக்கேட்ட திருமண வீட்டாரை மூன்று இளைஞர்களும் ஜாதி ரீதியாக அவதூறாகப் பேசினர். அதோடு, சிறிது நேரத்தில் மேலும் 10 பேரை அழைத்து வந்து, திருமண வீட்டை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது முருகாயியைத் தலையில் கடுமையாகத் தாக்கிய அக்கும்பல் வீட்டில் இருந்த மொய்ப்பணம் 15 ஆயிரத்தையும் திருடிச் சென்றது.